economics

img

மந்திரத்தில் மாங்காய் விழாது.... பொருளாதாரம் உயராது....

பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் தேவாலயத்தையும் அரசையும் பிரித்தல் ஆகியவற்றை ஆதரித்த ஒரு பிரெஞ்சு அறிவொளி எழுத்தாளர், வரலாற்றாசிரியர் மற்றும் தத்துவஞானி வால்டேர்,  “ஒரு மனிதனை கொஞ்சம் விஷம் மற்றும் மந்திர உச்சாடனங்களால் கொன்றுவிட முடியும்” என்று சொல்வார். அவர் ஒரு பகுத்தறிவுவாதி.  பாஜக அரசாங்கம் அப்படிஅல்ல. அது மந்திர உச்சாடனங்களாலேயே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பித்துவிட முடியும் என்று நம்புகிறது.சில நாட்களுக்கு முன்பு 2021-22க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது நிதி அமைச்சர் அப்படித்தான் உறுதி மொழி அளித்துள்ளார்.  இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கீட்டின் படி, முந்தையஆண்டை விட 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.7 சதவீதம் சுருங்கியிருக்க வேண்டும், 2020-21 உடன் ஒப்பிடும்போது 2021-22 ஆம் ஆண்டில் இது 10.5 சதவீதம் உயரும்.  இதன் பொருள் 2021-22 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அதன் உண்மை மதிப்பில் 2019-20 ஆம் ஆண்டைப் போலவே இருக்கும் என்பது தான். இதன் அடிப்படையில் தான் அரசு தரப்பில் பேசுபவர்கள் ஏ வடிவில் ஒரு பொருளாதார மீட்சி இருக்கும் என்கின்றனர். அதாவது எந்த அளவிலிருந்து வீழ்ச்சியடைந்ததோ அதே அளவிற்கு சற்று கூடுதலாகவோ குறைவாகவோ மீண்டும் வளர்ந்துவிடும் என்பது தான் அவர்களது வாதம்.

எந்தவொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும்அந்நாட்டின் நுகர்வு (C),  முதலீடு (I), அரசாங்க செலவினம் (G) மற்றும் நிகர ஏற்றுமதி (X-M) ஆகியவற்றின் கூட்டுத் தொகைக்கு சமமாக இருக்க வேண்டும். எனில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்ததில் இருந்து 10 சதவிகிதத்திற்கும் மேலாக உயர வேண்டும் என்றால், இவை அனைத்தின் மதிப்பும்  ஒருங்கிணைந்து 2020-21 ஆம் ஆண்டின் உண்மை மதிப்பை விட அதிகமாக உயரவேண்டும். நம்மில் யாராலும் தற்போது அடுத்த ஆண்டு நிகர ஏற்றுமதி என்னவாக இருக்கும் என்று சொல்ல முடியாது.  அப்படியானால் ஏ வடிவ மீட்சிக்கு வழி வகுக்கும் காரணிகளில் இருந்து நிகர ஏற்றுமதி (X-M) ஐ எடுத்து விடுவோம். மீதியிருப்பது நுகர்வு (C),  முதலீடு (I), மற்றும் அரசாங்க செலவினம் (G) மட்டும் தான்.  

நுகர்வும் குறையும்  முதலீடும் குறையும் 
2020-21 ஆம் ஆண்டில் உண்மை மதிப்பில் ரூ. 34.5 லட்சம் கோடியாக இருந்த அரசாங்கத்தின் மொத்த செலவினம் 2021-22ல் ரூ. 34.8 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.  அதாவது உண்மை மதிப்பில் அது குறையும். வரவிருக்கும் ஆண்டில் அரசாங்க செலவினங்கள் என்பதன் உள்ளடக்கம் மகா தொற்று ஆண்டிலிருந்து நிச்சயம் வேறுபட்டதாகவே இருக்கும். ஆனால், இன்றைக்கு இந்திய தேவைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும்போது, அரசாங்கசெலவினங்கள் மகாத் தொற்று ஆண்டுடன் ஒப்பிடும்போது, குறைவாகவே இருக்கும். 

பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்அதே விகிதத்தில் நுகர்வு அதிகரிக்கும். ஆனால், வரவிருக்கும் ஆண்டில், இது நடப்பதற்கான வாய்ப்பில்லை.  ஏனென்றால், மகா தொற்றின் போது திடீரென வேலை இழந்த பல உழைக்கும் மக்கள் தங்கள் நுகர்வு செலவிற்காக கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.  அவர்கள், இப்போது மீண்டும் வருமானம் பெற்றாலும்கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதால், தங்கள் நுகர்வினை குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே, நுகர்வும் வரும் ஆண்டில் உண்மை மதிப்பில் குறையத் தான் செய்யும்.

மகா தொற்றின் போது, பொது முடக்கத்தின் காரணமாக நின்று போன பல வேலைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த முதலீடுகள் வெளிவரத் துவங்கியுள்ளன. இது முதலீடுகள் அதிகரிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.  பொதுவாக முந்தைய ஆண்டின் அனுபவத்தின் அடிப்படையில் தான் வரும் ஆண்டிற்கான முதலீடு தீர்மானிக்கப்படும். கடந்த ஆண்டு மகா தொற்றுக் காலம் என்பதால் உற்பத்தியும் சுருங்கியிருந்தது என்பதை நாம் அறிவோம்.  மேலும், வரும் ஆண்டான 2021-22க்கான முதலீட்டிற்கான உற்பத்திஎன்பது மகா தொற்றுக்கு முந்தைய ஆண்டினை ஒத்ததாகத்தான் இருக்க முடியுமே தவிர அதை விட நிச்சயம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்காது. எனவே, 2020-21ம் ஆண்டில்புதிய முதலீடு என்பது கணிசமான அளவிற்கு குறையத்தான் வாய்ப்புள்ளது.  

எனவே, 2021-22ல் முதலீட்டிற்கும் வருமானத்திற்குமான விகிதாச்சாரம் 2020-21ஐ விட குறைவாகவே இருக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.5 சதமாக உயரும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒவ்வொரு காரணியும் (கணிக்க முடியாத நிகர ஏற்றுமதி தவிர்த்து) அத்தனையும் 10.5 சதத்திற்கும் குறைவாகவே வளர்ச்சி பெறும்.

உற்பத்தி அதிகரித்தாலும்  கிராக்கி அதிகரிக்காது 
இதற்கு என்ன பொருள் என்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தாலும், அதற்கேற்ற வகையில் கிராக்கி உயராது என்பது தான். கிராக்கி குறையும் போது அதன் விளைவுகள் பலவாக இருக்கும்.  எனவே, இந்திய பொருளாதாரத்தில் ஏ வடிவில் ஒருபொருளாதார மீட்சி இருக்கும் என்பதில் உண்மையில்லை.ஏனென்றால், இந்த பட்ஜெட்டில் அரசாங்க செலவினங்களில் எந்த உண்மை உயர்வும் இல்லை. 10.5 சதவீதம் வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றால், குறைந்தபட்சம் பட்ஜெட்டின் அரசாங்க செலவினம் என்பது 10.5 அளவிற்கு உண்மை மதிப்பில் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.  உண்மையில் அரசுச் செலவினங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளன.மேலும் இங்கே நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம், நிதிப் பற்றாக்குறை பற்றியது.  2020-21ல் மொத்தஉள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருந்த நிதிப்பற்றாக்குறை 2021-22ல் 6.8 சதவீதமாக இருக்கும் என்று குறைக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள உத்தேசஅரசு செலவினங்கள் வெட்டிச் சுருக்கப்படாது அப்படியே இருக்கும் என்று கொள்வோமானால், மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 10.5 சதவீதத்திற்கு வளர வேண்டும் என்றால் வரி வருமானம் அதிகரிக்க வேண்டும். அதே போலஒரு வேளை மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு என்பதுபட்ஜெட்டில் அறிவித்ததை விட குறைவாக இருக்குமானால், நிதிப் பற்றாக்குறை என்பது பட்ஜெட்டில் அனுமானித்ததை விட அதிகமாக இருக்கும்.  அதற்காக அரசாங்கம்அதனுடைய செலவினங்களை வெட்டிச் சுருக்குமேயானால், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இன்னும் குறையும்.  

வேலையின்மை தீராது
இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், இந்த பட்ஜெட் என்பது இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பட்ஜெட் அல்ல.  கடந்த பல வருடங்களாக இந்தியப் பொருளாதாரத்தை பாதித்துக் கொண்டிருக்கும் வேலையின்மை, மகா தொற்று காலத்தில் அதிகமானது, இன்னும் அப்படியேதொடரும் என்பது தான்.  ஒரு வேளை பட்ஜெட் அனுமானிப்பது போல் பொருளாதாரம் மீட்சியடையத் தொடங்கினாலும், வேலையின்மை பிரச்சனை மிகக் கடுமையாக அப்படியே தான் தொடரும்.  ஏனென்றால், சிறு உற்பத்தித் துறை இந்த பொது முடக்கக் காலத்தில் மோசமாக பாதிக்கப்பட்டது, இன்னும் அப்படியே தான் தொடர்கிறது.  

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அரசாங்கம் எந்தவிதமான காரணமும் இல்லாமல் எடுத்ததில் இருந்தே சிறு உற்பத்தித் துறை வீழ்ச்சியை சந்திக்கத் துவங்கியது. கொரோனா லாக்டவுன் காலக்கட்டம் இன்னும் இந்தத்துறையினை சரிவினை நோக்கி அழைத்துச் சென்றுள்ளது. அதனால் மீட்சிக்கு வழியில்லாமல் உள்ளது. இந்தத் துறையில் தான் வேலை வாய்ப்புகள் அதிகம் எனும் போது வேலையின்மை பிரச்சனை அப்படியே தொடர்கிறது.  அதனால் பிரச்சனை இன்னும் கடுமையாகவே உள்ளது. தாராளவாதத்தையும், தனியார்மயத்தையும் ஊக்கப்படுத்தியுள்ள படு பிற்போக்குத் தனமான இந்த பட்ஜெட், தற்போதைய தேவைக்கு நேர் எதிரானதாக உள்ளது. விஷக்காற்றை மறைக்கக்கூடிய அலங்கார வார்த்தைகள் நிரம்பியதாய் இந்த பட்ஜெட் உரை அமைந்துள்ளது. உண்மையில் பட்ஜெட்டின் பரந்துபட்ட விசாலமான பொருளாதாரத் தேவையும் முக்கியத்துவமும் தொலைந்து போயுள்ளது.

கட்டுரையாளர் ; பேரா.பிரபாத் பட்நாயக்

தமிழில் : ஆர்.எஸ்.செண்பகம்

;